V. Saminatha Sarma
இரங்கூனில் சிறந்த முறையில் நடந்துவந்த ஜோதி பத்திரிகையின் ஆசிரியர் எங்கள் சர்மாஜீ தமிழனின் சிந்தனையைத் தூண்டும் பல தலையங்கங்களை அதில் எழுதி வந்தார்கள். அவைகளில், ஒவ்வொரு வருடமும் காந்தியைப் பற்றி எழுதியவைகளை மட்டும் தொகுத்து இந்நூலாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றுள் காந்தி யார் என்ற முதல் அத்தியாயம் ஏற்கனவே முதற் பதிப்பாக வெளிவந்தது. இப்பொழுது புதிதாகச் சேர்த்திருக்கிற ஐந்து அத்தியாயங்களில், கடைசி அத்தியாயம் ஆசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு ஜோதியில் வெளிவந்ததாகும். அவ்வப் பொழுது எழுதிய இந்தத் தலையங்கங்களை வாசகர்கள் படிக்கும் பொழுது ஆசிரியரின் அரசியல் தீர்க்கதரிசனத்தையும் இந்தியாவின் தேவைகளையும் உணர சாத்திமாயிருக்குமென நம்புகிறோம்.எழுபத்திரண்டு சதுர மைல் விதீரணமுள்ள வாழ்க்கை யென்னும் யுத்த மைதானத்தில், அன்பு, அஞ்சாமை என்ற இரண்டு ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, முகத்திலே புன்சிரிப்புத் தவழ, கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு போர் வீரனாகக் காட்சியளிக்கிறார் காந்தியடிகள் இன்று நமக்கு. இந்த எழுபத்திரண்டு வருஷ காலத்தில், அவர் எத்தனையோ போர்களை நடத்தி யிருக்கிறார்; எத்தனையோ பேரைத் தாக்கியிருக்கிறார்; எத்தனையோ பேரால் தாக்கப்பட்டுமிருக்கிறார். ஆனால் அவர், தமது முகத்தில் சலிப்புக் காட்டியதோ, அகத்தில் வன்மம் கொண்டதோ கிடையாது. யுத்தத்தில் சகஜமாக ஏற்படக் கூடிய அநேக காயங்களை அவர் பட்டிருக்கிறார். ஆனால், எல்லாம் மார்பிலே தான். அவருடைய முதுகிலே ஒரு வடுவைக் கூடக் காண முடியாது. அப்படியே, எதிரிகளைத் தாக்குகிறபோதும், அவர்களுடைய மார்பிலேதான் காய முண்டுபண்ணினாரே தவிர, அவர்களுடைய முதுகுப்பக்கம் ஓர் அடி கூடக் கொடுத்ததில்லை.