M. P. Sivagnanam
இந்திய சுதந்தரப் போரில் ஈடுபட்டு, இன்னல் பல ஏற்றவர் வ.உ.சிதம்பரனார்.தமிழரின் தன்மானத்தைக் காக்க, வீரர் சிதம்பரனார் கண்ட கனவுகளை இன்று நம்மிடையே இருந்து அதை நனவாக்கிக் கொண்டிருப்பவர் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். வீரர் சிதம்பரனாருக்கு ’கப்பலோட்டிய தமிழன்’ என்னும் சிறப்புப் பெயரை வழங்கி அவரது புரட்சிமிக்க செயல்களை எழுத்தினாலும் பேச்சினாலும் தமிகத்திலும் வெளி இடங்களிலும் பரவச்செய்பவர் திரு. ம.பொ.சி.அவர் எங்கு சொற்பொழிவாற்றினாலும், அதில் புரட்சி வீரர் சிதம்பரனாரின் புகழ் இடம் பெறாமலிருக்காது.ஒருவரின் வரலாற்று நூலைப் படிப்பவர்களுக்கு சலிப்புத் தட்டா வண்ணம், ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் இனிய நடையில் எழுத முடியும் என்பதை இந்நூலின் மூலம் உறுதிப் படுத்தியுள்ளார் ம.பொ.சி. தமிழில் இதுவரை எந்த வரலாற்று நூலும் ஐந்து பதிப்புகள் வெளிவந்ததில்லை. அந்தப் பெருமையை கப்பலோட்டிய தமிழன்' என்னும் இந்நூல் பெற்று விட்டது.காதலும் வீரமும் தமிழினத்தின் இரு கண்கள் போன்றவை. பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வோர், அகம் புறம் என்ற இரு சொற்களில் இந்த உண்மை விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தமிழினத்தின் வீரத்திற்குச் சான்று கூறிய வள்ளுவப் பெரியாரும்,மயிர்நீப்பின் வாழாக் கவரிமா னன்ன உயிர்நீப்பர் மானம் வரின் என்றார். ஆம்; மானம் இழந்தபின் உயிர் வாழ்வது தமிழர் மரபன்று.வீர வழிபாடே இறை வழிபாடாகக் கொண்டவர் தமிழர். இறை வழிபாட்டின் உண்மையும் அதுவேயாம். ’கடவுள் வழிபாடு’ என்பதன் மூலத்தை ஆராயப் புகுந்தால், அது வீர வழிப்பாட்டில் துவங்கியதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.