M. P. Sivagnanam
'சிலம்பில் ஈடுபட்ட தெப்படி?' என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம். எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும்.நான் ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டு காலம் அடைபட்டிருந்த போது, என் உடம்பு கரைந்து கரைந்து- எலும்பு இளைத்து இளைத்து மரண அபாயத்துக்குள்ளானேன். அந்த நிலையில் வடநாட்டுப் பருவநிலை என் உடம்புக்குப் பொருந்தவில்லை என்று சொல்லி, சென்னை மாகாணத்து சிறைக்கு மாற்றும்படி உடனிருந்த சக அரசியல் சகாக்களின் அனுமதியோடு, சென்னை மாகாண அரசுக்கு விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பம் வெற்றி பெற்று, முதலில் வேலூர் சிறைக்கும், பின்னர் தஞ்சை சிறைக்கும் (தஞ்சை சிறை இளம் குற்றவாளிகள் அடைபடும் இடமாகும்) மாற்றப் பட்டேன். அதன் பிறகும் என் உடல்நிலை நான் இனியும் பிழைத்திருக்கக் கூடுமென்ற நம்பிக்கையை எனக்கு மட்டுமல்ல; என்னைப் பார்ப்போருக்கும் ஏற்படுத்துவதாக இல்லை.அந்த நிலையில் நூலினுள்ளே விவரித்துள்ளபடி என் உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிக்கு வரும்படி என் மனைவி வற்புறுத்தி அழைத்தாள். அது அவள் தாய் வீட்டு நிகழ்ச்சி. அப்போது நான் கேட்டேன் 'சிறையிலிருந்தபோது நான் இறந்து போயிருந்தால் என்ன செய்வாய்' என்று. அந்த நிலையில் அவள் சொன்னாள்'அப்படி நடந்திருந்தால் நான் கண்ணகியைப் போன்று இந்த ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்திருப்பேன்' என்று.அதன் பிறகுதான் சிலப்பதிகாரக் கண்ணகியை உவமை காட்டி தமிழ்நாட்டுப் பெண்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியில் ஈடுபடுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.