M. P. Sivagnanam
திருவள்ளுவரைப் பற்றியும், அவர் இயற்றிய திருக்குறளைப் பற்றியும் ’ஆராய்ச்சி’ என்ற பெயரால் வெளிவந்த கட்டுரைகளும் நூல்களும் கணக்கில் அடங்காதன. முதற் குறளில் வரும் ’ஆதி-பகவன்’ என்ற இரு சொற்களைக் கொண்டு எழுந்த கற்பனைக் கதைகள் அளவில.'வள்ளுவர் நந்தன் குலத்தில் வந்தவர்' என்பர், பிறப்பால் உயர்வு தாழ்வு காணாத பெருந்தகையாளர்கள்.'அது உண்மையன்று; வள்ளுவர் அப்பழுக்கற்ற அந்தணர்' என்பர், அறிவை அந்தணருக்கே தனி உடைமையாக்குவோர்.'அதெல்லாம் உண்மை கலந்த பொய்கள்; வள்ளுவர் ஆதி என்னும் புலைச்சிக்கும், பகவன் என்ற அந்தணருக்கும் பிறந்தவர். அதனாற்றான், முதற் குறளில் ’ஆதி-பகவன் முதற்றே உலகு’ எனக் குறிப்பிட்டுப் பெற்றோரைப் பெருமைப்படுத்தினார் என்பர் சமரச வாதிகள்.வள்ளுவர் பிறந்த இடத்தைப்பற்றி எழுந்த வாதங்களும் பலப்பல. 'வள்ளுவர் பிறந்த இடம் மதுரையே' என்பர் பாண்டி நாட்டுப் பற்றுடையோர்.'இல்லை; வள்ளுவர் பிறந்ததும் அவர் வாழ்வாங்கு வாழ்ந்ததும் தருமமிகு சென்னையே' என்பர் தொண்டை மண்டலத் தொடர்புடையோர்.வள்ளுவரின் சமயம் யாது? அவர் வைணவரா, சைவரா அல்லது சமணரா? என்பதைப்பற்றி நடந்த ஆராய்ச்சிகளுக்கும் குறைவில்லை. 'தாமரைக் கண் ணான் உலகு' என வரும் குறள் வரியைக் கொண்டு வள்ளுவர் திருமால் மதத்தினர் எனத் தீர்ப்பளிக்கின்றனர் சில வைணவப் புலவர்கள்.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். என்ற குறளில், ’மலர்மிசை ஏகினான்’ என வரும் சொல்லை அருகக் கடவுளுக்கே அருகதையாக்கி, வள்ளுவர் சமணரே என்று சாதிப்பர் சமண சமயத்தாரில் சிலர்.